×

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த அதிர்ச்சியில் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி அமைச்சருக்கு மனசாட்சியாக இருந்த எம்எல்ஏ, தேனிக்காரர் பக்கம் போய் கொடுக்கும் குடைச்சலை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலையின் ஒற்றைத்தலைமை பிரச்னையில், மதுரையில் உள்ள ஐந்து இலை கட்சி எம்எல்ஏகளில், உசிலை மக்கள் பிரதிநிதி பதவி, பணத்தை பார்த்ததும் தேனிக்காரர் அணிக்கு தாவிட்டாராம். அவருக்கு சவுத் மாவட்ட செயலாளர் பதவியில் கலக்குகிறாராம். சேலத்துக்கார் அணிக்கு இணையாக போட்டிபோட்டு களத்தில் பணியாற்றுகிறார். இதில் என்ன கொடுமை என்றால், சேலத்துக்காரர் ஆட்சியில், முன்னாள் அமைச்சர் உதயமானவருக்கு நெருக்கமாகவும், பினாமியாகவும் உசிலைக்காரர் இருந்தார். கமிஷன் கரன்சி வேலைகளை உசிலைக்காரர் மூலமாகவே உதயம் வாங்கி குவித்தாராம். அப்படியே தனக்கும் பத்து பர்சென்ட் எடுத்து தன்ைன பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தி கொண்டாராம். இது தெரியாமல் மாஜி அமைச்சர் உதயமானவர் கரன்சி கை மாற்றுவதற்கு இவரை தான் நம்பி பயன்படுத்தினாராம். இதனை பயன்படுத்தி, மணல் உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் உசிலை கைவரிசை காட்டினாராம். உதயத்தின் வலதுகரம் என்பதால், அதிகாரிகள் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

மதுரை புறநகரை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த உதயமானவர், கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில், உசிலை தொகுதியில் மூத்த கட்சி நிர்வாகிகள் இருக்க, அனைவரையும் எதிர்த்து, தனது வலதுகரமான இவருக்கு சீட் வாங்கி கொடுத்து, தனது பாணியில் தேர்தலில் ஆட்களை சப்ளை செய்து, பணத்தை இறக்கி வெற்றி பெற வைத்தார். இதனால், தனக்கு விசுவாசியாக தொடர்ந்து இருப்பார் என மாஜி அமைச்சர் நம்பியிருந்தார். ஆனால், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, கட்சியில் தானும் ஒரு பெரிய நிர்வாகியாக வர வேண்டும் என கருதி சமயம் பார்த்து தேனிக்காரர் அணிக்கு தாவினார். உதயமானவரை எதிர்த்து தற்போது அதே மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த வாரம் உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு நூற்றாண்டு விழா நடந்தது. அதில், உதயமானவர் பேசுகையில், நூற்றாண்டு கண்ட தலைவருக்கு சேலத்துக்காரர்தான் உசிலையில் சிலை வைத்தார் என பேச, உடனே பொங்கி எழுந்த தேனிக்காரரின் ஆதரவாளர்களும், உதயமானவரின் ஆதரவாளர்களும் மேடையில் மோதிக்கொண்டனர். ஒரே சலசலப்பு, பிரச்னை எழுந்தது. அப்போது, தேனிக்காரர்தான் சிலையை நிறுவி அவர்தான் திறந்து வைத்தார் என மேடையி்ல உதயமானவருக்கு உசிலை எம்எல்ஏ பதில் கொடுக்க, கொந்தளிப்பில் இருந்த உதயமானவர், மேடையை விட்டு வெளியேறி, ‘‘எனக்கு எதிராக அரசியல் செய்றயா… இருக்கட்டும்… பார்த்துக்கிறேன்’’ என சவால் விட, ‘‘உன் வேலை இங்கு செல்லாது’’ என பதிலுக்கு உசிலைக்காரர் சவால் விட அரசியல் மேடை குழாய் அடி சண்டையாக மாறியதை பார்த்த கீழ் நிலை இலை தொண்டன் சிரித்தபடி வீட்டுக்கு சென்றான்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனிக்காரருக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் கை ஓங்கியிருப்பதால் அரசியல் ரீதியாக அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வந்த தேனிக்காரர், இதை சரி செய்வதற்காக, தமிழகத்தின் மைய பகுதியான மலைக்கோட்டை மாவட்டத்தை தேர்வு செய்து இந்த மாத இறுதிக்குள் மாநாட்டை நடத்த அதற்கான வேலையும் நடந்து வருகிறதாம். இந்த மாநாட்டில் பெரிய அளவில் கூட்டத்தை காட்டுவதற்கான பொறுப்பு நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் ‘வைத்தியானவரிடம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். முக்கியமாக, டெல்டா மாவட்டத்தில் உள்ள சேலத்துக்காரர், குக்கர் அணியில் உள்ள நிர்வாகிகள், 2வது கட்ட நிர்வாகிகள் மற்றும் சின்னமம்மி ஆதரவாளர்களையும் இந்த மாநாட்டிற்கு அழைத்து வருவதோடு, அதிக கூட்டத்தை சேர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பையும் வைத்தியானவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். ஆனால், ‘வைத்தியானவர்’ தற்போது வரை பிடி கொடுக்காமல் இருக்கிறாராம். இதனால் மாநாடு நடத்தும் திட்டமும் தள்ளி போகலாமாம். இதனால் உச்ச கட்ட டென்ஷனில் உள்ள தேனிக்காரர், டெல்டா மாவட்டம் முழுவதும் விசிட் செய்து ஆட்களை திரட்ட முடிவு செய்துள்ளாராம்.. எக்காரணம் கொண்டும் மாநாடு தள்ளிப்போக கூடாது. குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என வைத்தியானவரையும் நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளாராம்… அவரும் பார்க்கலாம்னு ெசால்லிட்டு மவுனமாகிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அரசியலுக்கு பதிலாக எதிரியை ஒடுக்க ‘மையை’ எடுத்த இலை கட்சி பிரமுகர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் இருக்கும் ரெண்டு மாஜிகளுக்கும், ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமாம். எந்த காரியத்துக்கு சென்றாலும் அவர்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு விட்டு தான் வேலையை தொடங்குவாங்களாம். தேர்தல் பிரசாரத்திலும் இருவரும் சேர்ந்தே இயங்குறாங்களாம். இதுதான் இவர்களின் அரசியல் பாலிசி. அதே சமயத்தில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால், கேரள நம்பூதிரிகளையும் பார்ப்பார்களாம். இதில் ஒருவர் பயங்கரமான ஆயுதத்தை கையிலெடுப்பவராம். தனது வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தால், மாந்திரீக மாய மையை வரவழைத்து, ஆளை சாய்த்து விடுவாராம். இவ்வாறு அவர் செஞ்ச வில்லங்கத்தினால் தான், எதிர் பார்ட்டியில் ரெண்டுபேர் பாதிக்கப்பட்டதா பேசிக்கிறாங்க.

தொடர்ந்து குடைச்சல் வருவதால், மிகப்பெரிய திட்டத்தோடு ஒருவர் இருக்காராம். இதனை தனது நம்பூதிரிகள் மூலம் தெரிஞ்சிக்கிட்ட இன்னொருவர், ரொம்பவே ஜாக்கிரதையா இருக்காராம். யாராவது கோயிலுக்கு சென்று வருவதாக கூறி பூஜை ெபாருட்களை கொடுத்தால் கையால் எடுப்பதில்லையாம். அரசியல் ரீதியாக மோதிப்பார்ப்பதில் தில் இல்லாத காரணத்தால், நம்பூதிரிகள் மூலம் மையை அனுப்பி முடக்க திட்டமிட்டு செயல்படுவதாகவும், அதன்மூலம் அவருடன் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளாராம். படிக்கும்போதே இது மாயா ஜால கதையா இருக்கிறதே என்று நினைக்கலாம்… ஆனால், இலை அரசியல்வாதிகள் உண்மையிலேயே இந்த வேலையில் இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post வளர்த்த கடா மார்பில் பாய்ந்த அதிர்ச்சியில் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji ,minister ,MLA ,Minister of ,Peter Mama ,Raise Gada ,Maji Minister ,wiki ,
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...